எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஜேம்ஸ் பேங்க்ஸ்கட்டுரைகள்

சகோதரன் சவுல்

"ஆண்டவரே, தயவுசெய்து என்னை அங்குத் தவிர வேறு எங்கும் அனுப்புங்கள்." சுழற்சிமுறையில் பயிலிடம் மாற்றவேண்டியிருந்த மாணவனாக ஒரு வருடத்தைத் தொடங்குவதற்கு முன், ஒரு இளைஞனாக அதுவே என் ஜெபம். எங்குச் செல்வேன் என்று நான் அறியேன், ஆனால் எங்குச் செல்ல விரும்பவில்லை என்று நான் அறிவேன். நான் அந்த நாட்டின் மொழியைப் பேசவில்லை, அதன் பழக்கவழக்கங்கள் மற்றும் மக்களுக்கு எதிரான வெறுப்புணர்வுகளால் என் மனம் நிறைந்திருந்தது. எனவே என்னை வேறு இடத்திற்கு அனுப்பும்படி தேவனிடம் கேட்டேன்.

ஆனால் தேவன் தம் எல்லையற்ற ஞானத்தால் நான் செல்ல விரும்பாத இடத்திற்குத் துல்லியமாக என்னை அனுப்பினார். அவர் செய்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்! நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகும் அந்த மண்ணில் எனக்கு அன்பான நண்பர்கள் இருக்கிறார்கள்.  என் திருமணத்திற்கு என் சிறந்த நண்பர் ஸ்டீபன் அங்கே வந்தார். அவருக்கும் திருமணமாகிவிட்டது.

தேவன் மனமாற்றத்தை ஏற்படுத்தினால் அற்புதமான விஷயங்கள் நடக்கும்! அதுபோன்ற ஒரு மாற்றம் இரண்டு வார்த்தைகளால் விளக்கப்படுகிறது: "சகோதரனாகிய சவுலே" (அப்போஸ்தலர் 9:17).

அந்த வார்த்தைகள் அனனியாவிடமிருந்து வந்தவை, சவுலின் மனமாற்றத்திற்குப் பிறகு உடனடியாக அவரது பார்வையைக் குணப்படுத்த அழைக்கப்பட்டவர் (வ. 10-12). சவுலின் கடந்த காலத்தின் வன்முறை காரணமாக அனனியா முதலில் எதிர்த்தார், “உம்முடைய பரிசுத்தவான்களுக்கு எத்தனையோ பொல்லாங்குகளைச் செய்தானென்று அவனைக்குறித்து அநேகரால் கேள்விப்பட்டிருக்கிறேன்.” (வச. 13) என்று ஜெபித்தார்.

ஆனால் அனனியா கீழ்ப்படிந்து சென்றார். அவர் மனம் மாறியதால், அனனியா விசுவாசத்தில் ஒரு புதிய சகோதரனைப் பெற்றார், சவுல் பவுலானார், மேலும் இயேசுவைப் பற்றிய நற்செய்தி வல்லமையுடன் பரவியது. உண்மையான மாற்றம் அவரால் எப்போதும் சாத்தியம்!

தேவன் முன் அமர்ந்திருத்தல்

உயிருள்ள ஒரு நபரின் முதல் புகைப்படம் 1838 இல் லூயிஸ் டாகுரே என்பவரால் எடுக்கப்பட்டது. அந்த புகைப்படம் ஒரு மதிய நேரத்தில் பாரீஸில் உள்ள ஒரு வெற்று நுழைவாயிலிருந்த ஒரு உருவத்தைச் சித்தரிக்கிறது. ஆனால் அதில் ஒரு தெளிவான மர்மம் இருக்கிறது; அந்த நேரத்தில் தெரு, நடைபாதை வண்டிகள் மற்றும் பாதசாரிகளின் போக்குவரத்தால் பரபரப்பாக இருந்திருக்க வேண்டும், ஆனால் அந்தப் படத்தில் அவ்வாறாக இல்லை

அந்த மனிதன் தனியாக இல்லை. புகைப்படம் எடுக்கப்பட்ட பிரபலமான பகுதியான "புலவர்ட் டு டெம்பிள்" இல் மக்கள் இருப்பார்கள். குதிரைகள் இருக்கும். அந்தப் படத்தில் அவ்வாறாகக் காட்டப்படவில்லை. புகைப்படத்தைச் செயலாக்குவதற்கான ஒளிப்படப்பிடிப்பு நேரம் (டாகுவேரியோ வகை ஒளிப்பட முறை என்பது பொதுப் பயன்பாட்டிற்கு வந்த முதல் ஒளிப்படப்பிடிப்பு முறை ஆகும்) ஒரு படத்தைப் பிடிக்க ஏழு நிமிடங்கள் எடுக்கும். அந்த நேரத்தில் அசைவில்லாமல் இருக்க வேண்டும். நடைபாதையில் இருந்த ஒரே நபர் புகைப்படம் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது, ஏனெனில் அவர் மட்டுமே அசையாமல் நின்று கொண்டிருந்தார். அவர் தனது காலணிகளை சுத்தப்படுத்திக்  கொண்டிருந்தார்..

சில நேரங்களில் நிலைத்திருத்தல் என்பது செயலாலும் மற்றும் முயற்சியாலும் செய்ய முடியாததைச் செய்து முடிக்கிறது. சங்கீதம் 46:10ல், தேவன் தம்முடைய மக்களிடம், "நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்" எனக் குறிப்பிடுகிறார். "ஜாதிகள் கொந்தளிக்கும்போது" (வச.6), "பூமி நிலைமாறினாலும்” (வச.2), அமைதியாக அவரை நம்புபவர்கள், "ஆபத்துக்காலத்தில் அநுகூலமுமான துணை" யை  அவரில் கண்டடைவார்கள் (வச. 1).

"அமைதியாக இரு" என்று மொழிபெயர்க்கப்பட்ட எபிரேய வினைச்சொல் "முயற்சியை நிறுத்து" என்றும் குறிப்பிடுகிறது. நமது வரம்புக்குட்பட்ட முயற்சிகளில் நம்பிக்கை வைப்பதைக் காட்டிலும் நாம் தேவனில் இளைப்பாறும் போது, அவரே நம் அசைக்க முடியாத “அடைக்கலமும் பெலனும்" (வச. 1) என்று காண்கிறோம்.

தேவனுக்கு செவிகொடுத்தல்

எனது கல்லூரிக்கும், பாலைவனத்திலிருந்த என் வீட்டுக்குமான  சாலை வெறுமையாக இருந்ததால், நான் எனது வாகனத்தை சற்று வேகமாக ஓரிருமுறை ஓட்டினேன். காரணம் அந்த சாலை நீண்ட, நெடிய சாலை. முதலில் நெடுஞ்சாலை காவல்துறையிடமிருந்து எனக்கு ஒரு எச்சரிக்கை வந்தது. பின்னர் அபராத சீட்டு வந்தது. என் வாகனத்தின் வேகத்தை நான் மறுபடியும் குறைக்காததால், இரண்டாவது தடவையாக, அதே இடத்தில் நான் பிடிபட்டேன்‌.                         

செவிசாய்க்க மறுப்பதால், விபரீதமான பின்விளைவுகளை நாம் சந்திக்க நேரிடும். இத்தகைய மோசமான உதாரணத்தை, நல்லவனாய் மற்றும் உண்மையான ராஜாவாயிருந்த யோசியாவின் வாழ்க்கையில் நாம் காண முடியும். எகிப்தின் ராஜாவாகிய நேகோ, அசீரியர்களுக்கு உதவுவதற்காக பாபிலோனுக்கு விரோதமாகப் படையெடுத்து வந்தபோது, யோசியா அவனுக்கு விரோதமாக வந்தான். நேகோ, யோசியாவிடம் ஸ்தானாபதிகளை அனுப்பி ,"நான் இப்போது உமக்கு விரோதமாய் அல்ல என்னோடே யுத்தம் பண்ணுகிற ஒருவனுக்கு விரோதமாய்ப் போகிறேன்; நான் தீவிரிக்க வேண்டுமென்று தேவன் சொன்னார்; தேவன் என்னோடிருக்கிறார்; அவர் உம்மை அழிக்காதபடிக்கு அவருக்கு எதிரிடை செய்வதை விட்டுவிடும் என்று சொல்லச் சொன்னான்" (வ.21). தேவனே நேகோவை அனுப்பியிருந்தார். யோசியா அதற்கு செவிகொடாமல் மெகிதோவின் பள்ளத்தாக்கிலே யுத்தம் பண்ணுவதற்கு வந்தான் (வ.22). யோசியா மிகவும் காயப்பட்டு மரணமடைந்தான், யூதாவிலும் எருசலேமிலுமுள்ள யாவரும் அவனுக்காக துக்கம் கொண்டாடினார்கள் (வ.24).

தேவனை நேசித்த யோசியா, அவருக்கும், பிறர் மூலம் தனக்குக் கிடைத்த அவரின் ஞானத்திற்கும் செவிசாய்க்க நேரம் ஒதுக்காததால், தன் சுயவழிகளை நம்புவது நல்லதல்ல என்பதைக் கண்டுகொண்டான். நம்மை நாம் எப்பொழுதும் சோதித்துப் பார்க்கவும், தேவ ஞானத்தைப் பெற்றுக் கொள்ளவும் தேவன்தாமே நமக்குத் தாழ்மையைத் தந்து உதவுவாராக.                  

ஒரு குரங்கு, ஒரு கழுதை மற்றும் நான்

இரயில்களை சரியான தண்டவாளத்திற்கு மாற்றுவது எப்படி என்று ஜாக் அறிந்திருந்தான். ஒன்பது வருட அனுபவத்தில், தென்னாப்பிரிக்காவின் உய்டென்ஹேஜ் நிலையத்திற்கு வரும் ரயில்கள், அவை செல்ல வேண்டிய திசையை பேரொலி மூலம் சுட்டிக்காட்டியதால், அவன் தண்டவாள மாற்றுக் கருவியைச் சரியாக இயக்குவான்.

ஜாக் மனிதனல்ல ஒரு பபூன் குரங்கு. அவனை ரயில்வே சிக்னல்மேன் ஜேம்ஸ் வைட் பராமரித்து வந்தார். ஜாக்கும் தன் பங்கிற்கு அவருக்கு உதவியது. ஓடும் ரயில் பெட்டிகளுக்கு இடையே விழுந்ததில் வைட் தனது இரண்டு கால்களையும் இழந்தார். வீட்டுவேலைகளில் அவருக்கு உதவ ஜாக் பயிற்றுவிக்கப்பட்டான். விரைவில் ஜாக் அவருக்கு வேலையில் உதவினான், உள்வரும் ரயில்களின் சமிக்ஞைகளுக்கு ஏற்ப அதன் தடங்களுக்கு ஏற்ற நெம்புகோல்களை இழுப்பதன் மூலம் எவ்வாறு தடம் மாற்றவேண்டும் என்பதைக் கற்றுக்கொண்டது.

வியக்கத்தக்க விதத்தில் ஒருவருக்கு உதவிய மற்றொரு மிருகத்தைப் பற்றி வேதம் சொல்கிறது, அது பிலேயாமின் கழுதை. பிலேயாம் ஒரு புறஜாதி தீர்க்கதரிசி, இஸ்ரவேலுக்குத் தீங்கு செய்ய எண்ணிய ஒரு ராஜாவுக்குச் சேவையாற்றினான். ராஜாவுக்கு உதவியாக பிலேயாம் கழுதையின் மேல் ஏறிச் சென்றபோது, ​​“கர்த்தர் கழுதையின் வாயைத் திறந்தார்” அது பிலேயாமிடம் பேசியது (எண் 22:28). கழுதையின் பேச்சு, கர்த்தர் பிலேயாமின் கண்களைத் திறக்கும் விதத்தின் ஒரு பகுதியாக இருந்தது (v. 31), உடனடி ஆபத்தைப் பற்றி எச்சரித்து, தேவஜனங்களுக்கு தீங்கு விளைவிக்காமல் அவனைத் தடுத்தது.

ஒரு ரயில்வே பபூன்? பேசும் கழுதை? ஏன் கூடாது? தேவன் இந்த அற்புதமான விலங்குகளை நல்ல நோக்கங்களுக்காகப் பயன்படுத்தினால், அவர் உங்களையும் என்னையும் பயன்படுத்துவார் என்பதில் சந்தேகமேயில்லை. அவரையே நோக்கிப்பார்த்து அவருடைய பலத்தை நாடினால், நாம் நினைத்ததை விட அதிகமாகச் சாதிக்க முடியும்.

ஆசீர்வாதங்களை தாங்குபவர்

ஜனவரி 15, 1919 அன்று, அமெரிக்காவின் பாஸ்டன் நகரில், மூல சர்க்கரை பாகை ஏற்றிச் செல்லும் ஒரு டேங்கர் வாகனம் வெடித்தது. 75 லட்சம் லிட்டர் மூல சர்க்கரை பாகு, பதினைந்து அடி அலையாய் 30 மைல் வேகத்தில் தெருவில் பாய்ந்து, ரயில் வண்டிகள், கட்டிடங்கள், மக்கள் மற்றும் விலங்குகளை மூழ்கடித்தது. இந்த மூல சர்க்கரை பாகு அந்த அளவிற்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடியதாய் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அன்று 21 பேரின் உயிரைக் குடித்து, 150 பேருக்கு மேலானோருக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. 

இந்த மூல சர்க்கரைப் பாகைப் போன்று, சில நல்ல விஷயங்கள் கூட நம்மை எதிர்பாராத விதமாய் முழ்கடிக்கலாம். தேவன் இஸ்ரவேலருக்கு வாக்குப்பண்ணிய தேசத்திற்குள் பிரவேசிக்கும் முன்பு, மோசே அவர்களைப் பார்த்து, தேசத்திற்குள் பிரவேசிக்கும்போது அது தங்களுடைய சாமர்த்தியத்தினால் வந்தது என்று சொல்லவேண்டாம் என்று எச்சரிக்கிறார்: “நீ புசித்துத் திர்ப்தியாகி, நல்ல வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருக்கும்போதும், உன் ஆடுமாடுகள் திரட்சியாகி, உனக்கு வெள்ளியும் பொன்னும் பெருகி... உன் இருதயம் மேட்டிமையடையாமலும்… உன் தேவனாகிய கர்த்தரை நீ மறவாமலும்” இருக்கும் படிக்கும் இந்த ஐசுவரியத்திற்கு அவர்களின் சாமர்த்தியம் காரணம் என்று சொல்லவேண்டாம் என்றும் எச்சரிக்கிறார். அதற்கு பதிலாக, “உன் தேவனாகிய கர்த்தரை நினைப்பாயாக... ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறதற்கான பெலனை உனக்குக் கொடுக்கிறவர்” (உபாகமம் 8:12-14, 17-18) என்று அறிவுறுத்துகிறார். 

நம்முடைய சரீர ஆரோக்கியம் மற்றும் வாழ்வாதார தேவைகள் போன்ற அனைத்து காரியங்களும் தேவனுடைய கரத்தினால் அருளப்பட்ட ஈவுகள். நாம் கடினமாக உழைத்து சம்பாதித்தாலும், அவரே நம்மை தாங்குகிறவர். திறந்த கைகளோடு நம்முடைய ஆசீர்வாதத்தை பற்றிக்கொண்டு, நம் மீதான அவருடைய இரக்கங்களுக்காய் அவரை துதிப்போம். 

காணாமல்போனது, கண்டுபிடித்தேன், சந்தோஷம்

“என்னை ‘ரிங் மாஸ்டர்’ என்று அழைப்பார்கள். இந்த ஆண்டில் மட்டும் தொலைந்துபோன 167 மோதிரங்களை நான் கண்டுபிடித்திருக்கிறேன்.” 

நான் என்னுடைய மனைவி கேரியுடன் கடற்கரையில் நடந்துசென்றுகொண்டிருந்தபோது, தன் கையில் மெட்டல் டிடெக்டர் கருவியை வைத்துக்கொண்டு ஒரு வயதானவர் மணலை பரிசோதித்துக்கொண்டு இப்படியாய் பேசக்கேட்டோம். “சில மோதிரங்களில் அவர்களின் பெயர்கள் இடம்பெற்றிருக்கும்” என்று சொன்ன அவர், “அதை அதின் சொந்தக்காரரிடம் ஒப்படைக்கும்போது அவர்களின் முகங்களின் மகிழ்ச்சியை பார்க்க எனக்கு பிடிக்கும். கண்டெடுத்த மோதிரங்களை ஆன்லைனில் பதிவிட்டு, யாராகிலும் என்னை தொடர்புகொள்ளுகிறார்களா என்று பார்ப்பேன். பல ஆண்டுகளுக்கு முன்பாக தொலைந்துபோன மோதிரங்களையும் நான் கண்டுபிடித்திருக்கிறேன்” என்று சொன்னார். மெட்டல் டிடெக்டரை வைத்து தேடுவதை நானும் விரும்புவேன், ஆனால் அதை அடிக்கடி செய்வதில்லை என்று நான் அவரிடம் சொல்ல, “நீ தேடிப்போனால் தான் அதை கண்டுபிடிக்கமுடியும்” என்று பதிலளித்தார். 

லூக்கா 15ஆம் அதிகாரத்தில் தேடிக் கண்டுபிடிக்கும் ஒரு சம்பவத்தை நாம் பார்க்கமுடியும். தேவனை விட்டு தூரப்போன ஜனங்களை இயேசு இங்ஙனம் விமர்சிக்கிறார் (வச. 1-2). தொலைந்து போன ஆடு, வெள்ளிப்பணம், மற்றும் குமாரன் என்று மூன்று கதைகளை அங்கே சொல்லுகிறார். தொலைந்த ஆட்டைக் கண்டுபிடித்த அந்த மேய்ப்பன், “சந்தோஷத்தோடே அதைத் தன் தோள்களின் மேல் போட்டுக்கொண்டு, வீட்டுக்கு வந்து, சிநேகிதரையும் அயலகத்தாரையும் கூட வரவழைத்து... என்னோடுகூடச் சந்தோஷப்படுங்கள் என்பான்” (லூக்கா 15:5-6). அனைத்து கதைகளும் கிறிஸ்துவிலிருந்து தொலைந்துபோனவர்களைக் குறித்தது தான். கிறிஸ்துவை கண்டுபிடித்தவர்கள் மகிழ்ச்சியில் பூரிப்பாகின்றனர். 

“இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே” (19:10) இயேசு கிறிஸ்து வந்திருக்கிறார். அவருக்கு பிரியமான ஜனங்களை அவரிடத்தில் கொண்டுவருவதற்கு நமக்கு அழைப்பு விடுக்கிறார் (பார்க்க. மத்தேயு 28:9). மற்றவர்கள் தேவனிடத்தில் திரும்பும்போது ஏற்படும் மகிழ்ச்சி இன்னும் காத்திருக்கிறது. தேடிப்போகும் வரை நாம் அதை கண்டுபிடிப்பதில்லை. 

பொக்கிஷமான ஜெபம்

கிளார்க் மரங்கொத்தி ஒரு வியப்பான பறவையினம். ஒவ்வொரு ஆண்டும் தன்னை குளிர்காலத்திற்கு ஆயத்தப்படுத்தும் விதமாக நான்கைந்து வெள்ளை பட்டை பைன் விதைகளைச் சேகரிக்கும் இப்பறவை, ஒரு மணிநேரத்தில் சுமார் ஐந்நூறு விதைகளை ஒளித்துவைக்கிறது. பிறகு சிலமாதங்கள் கழித்து, கடும்பனியின் மத்தியிலும் இவ்விதைகளைத் தேடி வருகிறது. ஒரு கிளார்க் மரங்கொத்திப் பறவை, விதைகளை ஒளித்து வைத்திருக்கும் சுமார் பத்தாயிரம் இடங்களைக் கூட அறிந்திருக்கும். இது மிகவும் ஆச்சரியமானது (மனிதர்களாகிய நாம் நமது மூக்குக் கண்ணாடிகளையும், வண்டி சாவிகளையும் வைத்த இடம் தெரியாமல் திணறுவதை நினைத்தால் இது எவ்வளவு விசேஷித்தது).

இந்த வியத்தகு ஞாபக சக்தியும்கூட நமது ஜெபங்களை ஞாபகத்தில் வைத்திருக்கும் தேவனோடு ஒப்பிடுகையில், ஒன்றுமேயில்லை. ஒவ்வொரு உண்மையான ஜெபத்தையும் அவர் நினைவில் வைத்து, வருடங்கள் உருண்டோடினாலும் தவறாது அவைகளுக்குப் பதிலளிக்க வல்லவர். வெளிப்படுத்தின விசேஷத்தில் அப்போஸ்தலன் யோவான், பரலோகத்தில் தேவனை நான்கு ஜீவன்களும் இருபத்துநான்கு மூப்பர்களும் தொழுதுகொள்வதை விவரிக்கிறார். அவர்கள் ஒவ்வொருவரும், "பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும்" (5:8) பிடித்துக்கொண்டிருந்தார்கள்.

பண்டைய காலத்தில் தூபவர்க்கங்கள் விலையேறப்பெற்றவை. அவ்வாறே தேவனுக்கு நமது ஜெபங்களும் விலையேறப்பெற்றவை. ஆகவேதான் தேவன் அவைகளை தமக்குமுன் நித்தமும் பொற்கலசங்களில் வைத்துப் பாதுகாக்கிறார். தேவனுக்கு நமது ஜெபங்கள் முக்கியம், ஏனெனில் நாம் அவருக்கு முக்கியம். மேலும் நம்மைப்போலத் தகுதியற்றவர்களுக்குத் தேவன் இயேசுவின் மூலமாகப் பாராட்டும் இரக்கத்தால், அவரோடு தடையில்லா ஐக்கியத்தை அளிக்கிறார் (எபிரேயர் 4:14–16). ஆகவே தைரியமாக ஜெபியுங்கள், தேவனின் வியத்தகு அன்பின் காரணத்தால் உங்கள் ஒரு வார்த்தையும்கூட மறக்கப்படுவதுமில்லை, தவறவிடப்படுவதுமில்லை.

தேவ வசனத்தை உள்வாங்கிக்கொள்வது

எனது பெரிய மாமாவின் பழைய பண்ணை வீட்டின் வாசலில் தொங்கியபடி, கடினமான வார்ப்பிரும்பு வளையம் வலுவாக நின்றது. நூறு அடி தாண்டி மற்றொரு வளையம், பால் பண்ணையில் பொருத்தப்பட்டிருந்தது. பனிப்புயல் சம்பவிக்கும் தருணங்களில் என் மாமா அந்த இரண்டு வளையங்களையும் ஒரு கயிற்றால் இணைப்பார். அதின் மூலம் அவர் வீட்டிற்கும் கொட்டகைக்கும் இடையே உள்ள பாதையைக் கண்டுபிடிக்க வசதியாயிருக்கும். பனிபடர்ந்திருக்கும் தருணங்களில், அந்த அடையாளம் அவருக்கு தெளிவாய் வழிகாட்டியது. 

என் மாமாவின் இந்த அடையாளம், தேவனுடைய ஞானம் எவ்வாறு தன்னை வாழ்க்கையில் வழிநடத்துகிறது என்பதையும் பாவத்திலிருந்து தன்னை எவ்வாறு பாதுகாக்கிறது என்பதையும் பிரதிபலிக்கும் தாவீதின் பாடல் வரிகளை எனக்கு நினைப்பூட்டியது. “கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் சுத்தமும், என்றைக்கும் நிலைக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய நியாயங்கள் உண்மையும், அவைகள் அனைத்தும் நீதியுமாயிருக்கிறது. அவைகள் பொன்னிலும், மிகுந்த பசும்பொன்னிலும் விரும்பப்படத்தக்கதும், தேனிலும் தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தெளிதேனிலும் மதுரமுள்ளதுமாய் இருக்கிறது. அன்றியும் அவைகளால் உமது அடியேன் எச்சரிக்கப்படுகிறேன்; அவைகளைக் கைக்கொள்ளுகிறதினால் மிகுந்த பலன் உண்டு” (சங்கீதம் 19:9-11).

கர்த்தருடைய ஆவியானவர் நம் இருதயங்களில் கிரியை செய்து சத்தியத்தை உறுதியாய் பற்றிக்கொள்ளச் செய்வதால், நாம் நம்முடைய பாதையை தவறவிடாமலும், தேவனை கனப்படுத்தும் தீர்மானங்களையும் எடுக்க விழைகிறோம். வேதம் தேவனிடமிருந்து விலகிச் செல்லாமல் இருக்க நம்மை எச்சரிக்கிறது. மேலும் தேவனிடம் திரும்புவதற்கான பாதையைக் காட்டுகிறது. இது நம்முடைய இரட்சகரின் விலைமதிப்பற்ற அன்பையும் அவரை விசுவாசிக்கிறவர்களுக்கு காத்திருக்கும் ஆசீர்வாதங்களையும் நமக்கு அறிவிக்கிறது. வேதாகமம் ஒரு உயிர்நாடி! அதை எப்போதும் பற்றிக்கொள்ள தேவன் நமக்கு உதவி செய்வாராக. 

நம் இருதயத்தின் மெய்யான வீடு

பாபீ என்னும் நாய், அவர்கள் வீட்டாருடன் கோடை விடுமுறைக்குச் சென்ற இடத்தில் தொலைந்துபோனது. அது அவர்களுடைய வீட்டிலிருந்து 2200 கி.மீ. தூரத்திலிருந்த ஒரு இடம். அவர்களுடைய செல்லப்பிராணியை எல்லா இடங்களிலும் தேடி களைத்துப்போன குடும்பத்தினர், அது கிடைக்காத சோகத்தில் வீடு திரும்பினர்.
ஆறு மாதங்கள் கழித்து, குளிர்காலத்தின் இறுதியில், அழுக்கு மேனியோடு பாபீ வீட்டின் கதவுக்கு முன்பாக வந்து நின்றது. பயங்கரமான பள்ளத்தாக்குகள், ஆறுகள், பாலைவனம், மற்றும் பனிபடர்ந்த மலைகள் என்று எப்படியோ கடந்து அது நேசத்திற்குரிய குடும்பத்தினரைச் சந்திக்க வீடு திரும்பியது.
அந்த ஊரில் நடந்த இந்த சம்பவமானது புத்தகங்களாகவும் திரைப்படங்களாகவும் பல்வேறு விதங்களில் பிரபலமானது. தேவன் அதைக்காட்டிலும் அதிகமான ஏக்கத்தை நம்முடைய இருதயங்களில் வைத்திருக்கிறார். பண்டைய இறையியலாளர் அகஸ்டின் சொல்லும்போது, “நீர் எங்களை உமக்காகப் படைத்திருக்கிறீர்; எங்கள் இருதயம் உம்மிடம் சேரும்வரை அது அலைந்து திரிகிறது”என்று விவரிக்கிறார். இதே ஏக்கத்தை, தன் எதிரிக்குப் பயந்து யூதேயாவின் வனாந்தரங்களில் ஒளிந்துகொண்டு தாவீதும் வெளிப்படுத்துகிறார்: “தேவனே, நீர் என்னுடைய தேவன்; அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது, என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது”(சங்கீதம் 63:1).
ஜீவனைப் பார்க்கிலும் தேவனுடைய கிருபை நல்லது (வச.3) என்பதினால் தாவீது தேவனைத் துதித்தான். அவரை அறியும் அறிவுக்கொப்பானது எதுவுமில்லை. தேவனை விட்டு தூரமாயிருந்த நம்மை அவருடைய அன்பு என்னும் சுயதேசம் சேரும்படிக்கு இயேசுவின் மூலம் தேவன் நமக்கு வழியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். நாம் அவரிடம் திரும்பும்போது, நம்முடைய இருதயத்தின் மெய்யான வீட்டிற்குள் பிரவேசிக்க முடியும்.